ட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டிலும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது ட்விட்டரால் மட்டுமே முடியும்! வரும் காலங்களில் தொலைக்காட்சியைவிட அதிகமான மக்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடமாக ட்விட்டர் மாற இருக்கிறது.
இங்கு செய்தியாளர்கள் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள்தான். புரியவில்லையா? உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டில் நிலநடுக்கம் உணருகிறீர்கள்! அதை ட்விட்டரில் தெரிவிக்கும்போது, உங்களைப் பின்தொடருபவர்கள் ரீட்வீட் செய்யும்போது அவர்களைப்பின் தொடரும் நண்பர்களுக்கு நொடியில் செய்தி சென்று சேரும்! இப்படி ஒருசில வினாடிகளில் உங்கள் செய்தி உலகம் முழுவதும் தெரிந்துவிடும். ட்விட்டரை விளக்கும் வகையில் புதிதாய் ட்விட்டருக்கு வரும் அன்பர்களுக்கான பதிவு இது!
மிகமிக முக்கியமான விஷயம் – ட்விட்டர் மிகவும் பாதுகாப்பானது. பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய விவரங்களைத் தவறாக உபயோகிக்க வாய்ப்பு மிக அதிகம். புகைப்படம் போன்றவற்றை தவறான செயல்களுக்கு உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் ட்விட்டரில் நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை நீங்களாகவே வெளியிடாதவரை யாருக்கும் தெரியாது.