திருப்பூர், மார்ச் 20: கொத்தடிமை முறையின் நவீன வடிவமாக உள்ள சுமங்கலித் திட்டத்தை எதிர்த்து, பிரசார இயக்கம் நடத்துவது என மாவட்ட ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
÷திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்புக் கூட்டம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் வி.ஏ.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், அகில இந்திய துணைத் தலைவர் வஹிதாநிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, பொதுச்செயலர் பி.ஆர்.நடராஜன், உழைக்கும் பெண்கள் அமைப்பின் பொதுச்செயலர் ஜி.சாவித்திரி மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளாக ஜெயலட்சுமி (தலைவர்), சாவித்திரி (செயலர்) உள்பட 20 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
÷கூட்டத்தில், பனியன், கட்டிடம் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை பணியில் அமர்த்தி வேலை வாங்கும் முறை அதிகளவில் நடந்து வருகிறது. கொத்தடிமை நவீன வடிவமான சுமங்கலி திட்டத்தை எதிர்த்து பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.