சென்னை, ஜூலை.5- விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருந்தால் இன்று (வியாழக்கிழமை) முதல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டி மதிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலாளர் சுனீல் பாலிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வழிகாட்டி மதிப்பின் உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில், முத்திரைத்தீர்வை மற்றும் பதிவு கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருந்தால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு, இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.